naathamnews.com

பிரித்தானிய பிரதமரின் வாயில்தளத்தின் முன் அணிதிரள தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறைகூவல் !

பிரித்தானிய பிரதமரின் வாயில்தளத்தின் முன் அணிதிரள தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறைகூவல் !
janvier 27
23:40 2020


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என சிறிலங்கா அரசுத்தலைவரின் கூற்றுக்கு சர்வதேச நீதி வேண்டி, பிரித்தானிய பிரதமரின் வாயில்தளத்தின் முன் எதிர்வரும் புதனன்று அணிதிரள பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தை புறந்தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதோடு  தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையை உலக நாடுகள் தலையிட்டு சிறிலங்கா அரசினை ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்’ அல்லது அதற்கு நிகரான ‘சர்வதேச நீதிப் பொறிமுறை’ ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

29 ஜனவரி 2020 புதன்கிழமை, மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரை 10 Downing street, Westminster SW1A  2A  இடம்பெற இருக்கின்றது.

தமிழ் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பழைய மாணவர் சங்கங்கள், ஊர் சங்கங்கள், திருக்கோயில் அமைப்புக்கள், தமிழ் பாடசாலைகள் உட்பட பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள் பலவும் கூட்டாக அணிதிரள அழைப்புவிடுத்துள்ளன.

இது தொடர்பில் நாடுகடந்;த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2009ம் ஆண்டு தமிழின அழிப்பு இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என சிறிலங்காவின் அதிபர் கோட்டபாய இராஜபக்ச கடந்த ஜனவரி 20ம் திகதியன்று தெரிவித்துள்ளார்.

முன்னராக, 2016ம் ஆண்டு தமிழர் தாயகத்தின் வட புலத்தே யாழ்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வின் போது, சிறிலங்காவின் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும், இதனையே அன்று தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா ஆட்சியாளர்களது ஒப்புதல் வாக்குமூலமாக இவைகள் காணப்படுகின்ற நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச சமூகத்துக்கும், தமிழர்களுக்கும் வழங்கவேண்டிய இடத்தில் சிறிலங்கா அரசு உள்ளது.

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு, தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நடந்தவற்றின் முடிவு தெரியாதவிடத்து  ‘உண்மையை அறிவதற்கான உரிமை’ இருக்கிறது என்பதைச் சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கிறது. மேலும் கட்டாயமாகக் காணாமற்போகச் செய்யப்படும் குற்றத்திலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 2015 டிசம்பர் 15 அன்று சிறீலங்கா கையொப்பமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் 21 வது பிரிவின்படி, காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதோடு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு  ‘காணாமற்போனவர்களுக்கு நடந்ததென்னவென்ற என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமையையும்’ அளிக்கிறது.  

சிறிலங்கா அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இப்போது உயிருடன் இல்லை என்பதை எந்த அடிப்படையில் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் வெளியிடுகின்றனர் என்ற என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு என்ன நடந்தது ?
யாரால் படுகொலை செய்யப்பட்டார்கள் ?
எப்போது படுகொலை செய்யப்பட்டார்கள் ?
அவர்களது உடலங்கள் எங்கே ?

இவைபற்றிய திட்டவட்டமான தகவலை குடும்பங்களுக்குக் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உண்டு.

அதனை தட்டிக்களிக்குனால், அது காணாமற்போனவர்களின் குடும்பங்களின் துன்பத்தை நீடிக்கச் செய்வதோடு, அவர்களது மனித உரிமைகள் மீறப்படும் குற்றத்தையும், சர்வதேச சட்டத்தின்கீழ் பல்வேறு கடப்பாடுகளிலிருந்தும், மனித உரிமைகள் சபையின் தீர்மானம் HRC/RES/31/1   முன்வைத்த கடப்பாடுகளிலிருந்தும் தவறிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், இதற்கு நிகரான ஓர் சர்வதேசப் நீதிப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் என்பதோடு சிறீலங்காவைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment